Rohit Sharma reaction on Virat kohli today press conference
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 3-0 என தோற்ற நிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, அடுத்த போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடும் எனக் கருதப்பட்டது. இதில் டாஸ் வென்ற அந்த அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் தலா 52 ரன்கள் அடித்தனர். அடுத்து வெங்கடேஷ் ஐயர் 33 (18) ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 186/5 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நிகோலஸ் பூரன் 68 (41), ரௌமேன் பௌல் 68 (36) இருவரும் சிறப்பாக விளையாடியதால், மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து வெற்றியை நோக்கி முன்னேறி வந்தது.
அப்போது கடைசி 6 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் இரண்டு பந்துகளில் சிங்கில்கள் சென்ற நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் பௌல் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
இதனால், கடைசி இரண்டு பந்துகளில் 11 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது சாமர்த்தியமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் இரண்டு சிங்கில்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார்.
இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 178/3 ரன்கள் மட்டும் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
ரோஹித் ஷர்மா பேட்டி:
இப்போட்டி முடிந்த பிறகு பேட்டி கொடுத்த ரோஹித் ஷர்மா, “மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அபாரமான அணியுடன் மோதும்போது பயம் இருந்துகொண்டுதான் இருக்கும். போட்டியை சுலபமாக முடிக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்தது. இருப்பினும், இந்த நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து, சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்தினோம்.
புவனேஷ்வர் குமார் பவுன்சர் யார்க்கர்களை பயன்படுத்தி, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். முதல் இரண்டு ஓவர்களில் நாங்கள் சிறப்பான துவக்கம் தராதபோது, விராட் கோலி வந்து சில பெரிய ஷாட்களை ஆடி, என் மீது இருந்த நெருக்கடிகளையும் குறைத்தார்” என ரோஹித் பேசினார்.
மேலும், “அடுத்து ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர் இருவரும் அபாரமாக விளையாடி, பெரிய ஸ்கோர் வர உதவினார்கள். வெங்கடேஷ் ஐயர் நாளுக்கு நாள், தனது சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சியான செய்திதான்.
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். கடைசி நேரத்தில், எனக்கு ஒரு ஓவர் வேண்டும் என வெங்கடேஷ் கேட்டார். இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள்தான் நமக்கு தேவை. பீல்டிங்கில் சொதப்பியது, வருத்தத்தை ஏற்படுத்தியது. சில கேட்ச்களை நிச்சயம் பிடித்திருக்க வேண்டும். அதில் கோட்டைவிட்டுவிட்டோம்” எனக் கூறினார்.
மேலும் படிக்க :
Follow Us at Google News : :
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.